Friday, October 25, 2013

குருவடி சரணம்! குருவே சரணம்!

என்றோ செய்த புண்ணியப் பலனாய்
சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்
அன்பே ஒன்றே அணிகலனாக்கி
அகமும் புறமும் நிறைத்திட வந்தாய்

கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்
காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்
இனிமை ஒன்றே நின் சொலில் வந்திட
அடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்

பழகிட எளிமை பார்த்திட இனிமை
அழகிய முகத்தின் அருளொளி இனிமை
திகழும் புன்னகை சிந்திட இனிமை
புகலும் மொழிகள் கேட்டிட இனிமை

இறைவன் இருப்பது நின்னால் புரிந்தேன்
நம்பிடும் சொல்லில் வேதம் உணர்ந்தேன்
கும்பிடும் அடியவர் குணங்கள் அறிந்தேன்
கோபம் இல்லா வாழ்வினை விழைந்தேன்

இறைவழி சென்றிட இன்னல்கள் இல்லை
தன்வழி சென்றிடும் குணமும் அவனே
தன்வழி இறைவழி சேர்ந்திடும் போது
தன்னலமில்லா இன்பம் வருமே

என்வழி எனநான் எண்ணிடும் செய்கை
இறைவழி விட்டு விலகிடும் பாதை
என்செயல் செய்திட விளைந்திடும் வினைவுகள்
என்விதி என்பதை எனக்கே தெளிந்தாய்

தாயை வேண்டிட தயவவள் புரிவாள்
வேண்டும் யாவையும் விரைந்தே அருள்வாள்
கொடுப்பது ஒன்றே அவளின் குணமாம்
கோபம் கொள்வது இறையிலை என்றாய்

காலையில் தினமும் ஒருசிலநொடிகள்
தாயை வேண்டி தியானம் செய்தால்
நாளும் உடனே அன்புடன் காத்திட
நற்செயல் செய்திட தாயவள் வருவாள்

பலநூல் படித்துக் காலத்தைக் கழித்து
படித்ததன் பொருளை உணர்ந்திட மறுத்து
அனைத்தும் அறிந்ததாய் ஆணவம் பிடித்து
இருக்கும் நாட்களைச் செலவிடல் முறையோ

படித்தது போதும் பயிற்சியில் நுழைவாய்
நாளும் சிலநொடி தியானம் புரிவாய்
கனவினில் நிகழ்வது யாவும் பொய்யே
நனவிலும் அதுவே என்பதை உணர்வாய்

எதிரினில் இருப்பவர் யாரென உணர்ந்திட
ஐம்புலன் ஆளுமை அவசியம் தேவை
புலன்வழி அறிந்திடும் யாவும் பொய்யே
மெய்வழி எதுவென மனதினுள் தேடு

தன்னை அறிந்திட கனவுகள் புரியும்
நனவினில் நிகழ்வதும் கனவெனப் புரியும்
நின்னைத் தவிர்த்து நித்திலம் இல்லை
காணும் அனைத்திலும் தாயே கடவுள்

அனைத்தும் கடவுள் அகிலமும் கடவுள்
அன்பே கடவுள் ஆழ்மனம் கடவுள்
எல்லாம் கடந்தபின் ஏதெவர் கடவுள்
எல்லையில்லா நிறைவே கடவுள்

இறைவழி ஒன்றி நின்செயல் நடத்து
மறைவழி யாவும் மனதினுள் விளங்கும்
குறைவிலா இன்பம் உள்ளினுள் பெருகும்
நிறைவாய் வாழ்ந்திடும் நிம்மதி விளங்கும்

தெளிவிலா எதுவும் ஆன்மீகம் இல்லை
துணிவுடன் அதனைத் தள்ளிடல் நன்றே
இதுவே தெளிவென உள்மனம் சொல்லும்
அதுவே குருவருள் வாய்த்திடும் நன்நாள்

கனிவுடன் வருவான் கைகளைப் பிடிப்பான்
அன்பனே வாவென அழைத்துச் செல்வான்
இன்பம் நிறைத்திடும் வழியினைக் காட்டி
நண்பனாய் நின்னை நடத்திச் செல்வான்

பெருங்கடல் போலே நீசொன்ன வேதம்
சிறுதுளி அதனில் செப்பினேன் இங்கே
புரிதலில் மொழிதலில் தவறுகள் இருப்பின்
நீயே அறிவாய் குறைகள் களைவாய்

குருவருள் இன்றி திருவருள் இல்லை
குருவே ஒருவரின் வாழ்வின் எல்லை
அருளைப் பொழிந்திடும் அவன் தாள் சரணம்
குருவடி சரணம்! குருவே சரணம்!

No comments:

Post a Comment